சென்னை: சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரகுமான் உசேன் (45) என்ற பயணி மீது அலுவலர்களுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர்.
அப்போது அவருடைய உடைமைகள் 606 கிராம் எடையுடைய தங்கப்பசை மற்றும் 2 ஐபோன்கள் உட்பட மின்னணு சாதனப்பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.37.17 லட்சம். இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இயக்கப்படும் பேட்டரி வாகன டிரைவா், பயணி ஒருவர் தனது கைப்பையை பேட்டரி வாகனத்தில் வைத்துவிட்டு இறங்கி சென்றுவிட்டாா் என்று கூறி, அந்த கைப்பையை சுங்க அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளார். அந்த கைப்பையை சோதனை செய்த அலுவலர்கள், அதில், 475 கிராம் தங்க செயின், மற்றும் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த கைப்பையில் கட்டியிருந்த டேக்கில், அது இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியுடையது என்று தெரியவந்தது.
இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்து அலுவலர்கள், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை விமான நிலைய பேட்டரி வாகனத்தில் விட்டு சென்றவா் மீது வழக்குப் பதிவு செய்து ,விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து சார்ஜா, இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60.16 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ 80 கிராம் தங்கம் மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் பயணிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு கடத்தல் ஆசாமி தப்பியோடிவிட்டாா். அவரைத் தேடி வருகின்றனர்.