சித்திரை மாதத்தில் வரும் அக்ஷய திரிதியை நாள் தங்கம் வாங்க சிறந்த நாளாக நம்பப்படுகிறது. இந்த நாளில் எதுவாங்கினாலும் பெருகும் என்ற நம்பிக்கையால் தங்கத்தை தேடி ஓடுகின்றனர் மக்கள். தங்கம் மட்டுமல்ல நன்மை தரும் எதையும் வாங்கலாம் என கூறப்பட்டாலும், செல்வம் சேர்க்கும் நோக்கத்தால் தங்கமே பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ளது.
கரோனாவிலிருந்து மீண்ட விற்பனை: நவீனமயமாகிவிட்ட இந்த நாளில் தங்க நகைக்கடைகளில் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டு அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் தங்கம் விற்பனை சற்றே சுணக்கத்தைக் கண்டிருந்தது. ஆனால் முன்பதிவு எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது தங்கம் விற்பனை பழைய நிலைக்கு மீண்டு விட்டதாக வணிகர்கள் தெரிவித்தனர். குறிப்பிட்டு சொல்லப்போனால் தங்கம் விற்பனை கடந்த 2 ஆண்டுகளை விடவும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் 18 டன் விற்பனையா?: சில செய்தி ஊடகங்களில் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 18 டன் விற்பனை ஆனதாக தகவல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினரின் தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியை நாடினோம்.
30 சதவீதம் விற்பனை அதிகரிப்பு மட்டுமே உண்மை: தங்கத்தின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது மட்டுமே தான் கொடுத்த தகவல் என்ற சலானி, 18 டன் விற்பனை என்பது வெளியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திரட்டப்பட்டிருக்கலாம் என்று கூறினார். 18 டன் விற்பனை என்ற தகவல் அதிகாரப்பூர்வமாது அல்ல என அவர் மறுத்தார். இருந்தாலும் கடைகளில் திரண்டிருந்த கூட்டத்தின் அடிப்படையில் 18 டன் தமிழகத்தில் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என தான் நம்புவதாக குறிப்பிட்டார்.
2019இல் தேசிய அளவிலான விற்பனை: 2019ஆம் ஆண்டு தேசிய அளவில் தங்கம் விற்பனையான தகவல்களை ஈடிவி பாரத் திரட்ட முயற்சித்தது. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் (Confederation of All India Traders) தகவலின் படி 2019ஆம் ஆண்டு அக்ஷய திரிதியை நாளில் நாடு முழுவதும் 22 டன் தங்கம் விற்பனையானது. தற்போதைய நிலையில் 30 சதவீதத்துக்கு மேல் தங்க விற்பனை அதிகம் என கணக்கிட்டாலும், 27 முதல் 30 டன் வரையிலும் நாடு முழுவதும் விற்பனையாகியிருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 18 டன் சாத்தியமா? - ஒட்டு மொத்த இந்திய மதிப்பில் பாதிக்குமேல் தமிழகத்தில் விற்பனையாகும் என்ற கணிப்பு சாத்தியமில்லை என்றே பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு டன்னுக்கு ஆயிரம் கிலோ என்ற கணக்கீட்டின் படி தமிழகத்தில் 18 டன் விற்பனையாகியிருந்தால் நகைக்கடைகளுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 256 கோடி ரூபாய்க்கு மேல் நகைக்கடைகளுக்கு சென்றிருக்க வேண்டும்.
இருந்தாலும் உக்ரைன் போர் நிலவரம் கரோனாவுக்கு பிந்தைய மக்களின் சிந்தனை மாற்றம் உள்ளிட்டவை தங்கத்தை நோக்கிய முதலீட்டுக்கான உந்துதலாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளைவிட தங்கம் விற்பனை அதிகம் என்ற தகவல் உண்மை தான் என்பதால், டன் கணக்கில் நகை விற்பனை சாத்தியம் என்றாலும் தமிழகத்தில் மட்டும் 18 டன் விற்பனை என்பதற்கு ஆதாரப்பூர்வ தகவல்கள் எதுவும் நிறுவப்படவில்லை.
இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியவில்லையா : இதை செய்தாலும் புண்ணியம் தான்...