சென்னை : தங்கத்தின் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. நிலையற்ற சூழலில் தங்கத்தின் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால்மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட்டது கூட தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க சூழல் உள்ளிட்ட காரணிகள் கூட தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படக் காரணம் என்றும் கூட கூறலாம்.
நேற்றைய சந்தை நிலவரப்படி, சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 280 ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகி வந்தது. மேலும் கிராமுக்கு 25 ரூபாய் வரை குறைந்து 5 ஆயிரத்து 535 ரூபாய்க்கு தங்கம் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதற்குள் தங்கம் விலை உயர்ந்து உச்சம் தொட்டு உள்ளது, இன்றைய (ஏப்.4) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 76 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பெரும்பாலான வீடுகளில் திருமணங்கள் நடைபெறும் என்ற நிலையில் திடீரென தங்கம் விலை உச்சம் தொட்டு வருவது பெண்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா - எல்லைப் பிரச்சினையில் மீண்டும் சீண்டுகிறதா?