சென்னை: சென்னை மதுரவாயலைச்சேர்ந்த வெங்கடேசன் என்பவர் குடும்பத்தோடு திருவண்ணாமலை சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிய வெங்கடேசன் சிறிது தூரம் வந்ததும், கைப்பையை பேருந்தில் தவறவிட்டது தெரியவந்துள்ளது.
அதில் 16 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து பேருந்துக்குச் சென்ற வெங்கடேசன், தவறவிட்ட பையைத் தேடினார். ஆனால், பை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அளவுக்கு அதிகமாக மது போதையில் ஒரு நபர் பல பேருந்துகளில் ஏறி இறங்குவதும், கடைசியாக இந்த பேருந்தில் ஏறி இறங்கும்போது கைப்பையோடு இறங்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. அதன்படி, சிசிடிவி கேமராவில் தென்பட்ட நபரிடம் சோதனை மேற்கொண்டதில், காணாமல் போன நகைப்பை அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பையை மீட்ட போலீசார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்; பயணியிடம் விசாரணை