சென்னை அடுத்த குன்றத்தூர் சதானந்தபுரத்தைச் சேர்ந்த மேரி (53) வீட்டு வேலை செய்யும் பெண்மணி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அனகாபுத்தூர் செல்லும் வழியில் கர்மாநகரிலுள்ள மருந்தகத்திற்கு மருந்துவாங்க சென்றிருக்கிறார். அச்சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேலை வாங்கித் தருகிறேன் என மேரியிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறார்.
நல்ல சம்பளம், நல்ல வேலை என்ற ஆசையில் மேரியும் ஒப்புக் கொண்டு அந்த நபரோடு செல்ல, அனகாபுத்தூர் சர்வீஸ் சாலை அருகேயுள்ள ஒரு வீட்டைக்காட்டி, ’இங்குதான் நீங்கள் வேலை செய்யப் போகிறீர்கள்’ என மேரியின் கவனத்தை திசை திருப்பி மேரியின் கழுத்திலிருந்த 3 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.
மேரி பலத்தக்காயங்களுடன் மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின்னர், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு வந்த மேரி புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து சங்கிலியைப் பறித்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் திருட்டு: சிசிடிவி காட்சிகளில் சிக்கியவர்கள் சிறையில் அடைப்பு