சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்களில் ஹவாலா பணம், தங்கம் ஆகியவை அவ்வப்போது கடத்தப்படுவதாக சுங்க இலாகா அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட சுங்கத் துறையினர், கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்யவிருந்த முகமது நாசர், அஜிஸ்கான் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்களிடம் சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரியால், யூரோ கரன்சி நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த சுங்கத் துறையினர், அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல், சார்ஜாவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்த விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கடியில் மர்மமான பார்சல் ஒன்றை சுங்கத் துறையினர் கண்டெடுத்தனர். அதில் சுமார் 15 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.