சென்னை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், சுவாதி என்ற மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததற்காக ஆணவக் கொலை செய்யப்பட்டதாக, சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8இல் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், யுவராஜ் உட்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உடன், இருவரின் ஆயுள் தண்டனையை ஐந்து ஆண்டுகளாக குறைத்து ஜூன் 2ஆம் தேதி தீர்ப்பு அளித்து இருந்தது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜின் காதலியான சுவாதிக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாதி கைக்குழந்தையுடன் ஆஜராகி இருந்தார். அவர் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சுவாதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைகளின் போது நேரில் ஆஜராவதில் இருந்து சுவாதிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.