கலைவாணர் அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "சந்தையில் வரக்கூடிய பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி குறைப்பதாக முதலமைச்சர் விதி எண் 110இன் கீழ் அறிவித்துள்ளார்.
நெசவாளர்கள் வாழ்வை மேம்படுத்தக் கூடிய வகையிலும் பஞ்சு உற்பத்தியாளர்களுக்கும் பஞ்சு விற்பனையாளர்களுக்கும் தாராளமாகக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கும் வரி குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனிதனுடைய மானத்தைக் காக்கும் வகையில் ஆடை கொடுத்து நலிந்து கூடியவர்கள் நெசவாளர்கள். அவர்களுக்கான இந்த அறிவிப்பினை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறோம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
அந்த அரசாணையில் ஒரு திருத்தம் கொண்டு வர வேண்டும். போட்டித் தேர்வுகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். போட்டித்தேர்வுகளை தமிழில் எழுதக் கூடியவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: நாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்