சென்னை: நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தினை ஒன்றிணைந்து மேற்கொள்வதென முதலமைச்சர் தலைமையில் (ஜனவரி 8) நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், "நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக்கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் நீட் தேர்வை மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதாக மட்டுமின்றி - அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தைச் சீரழிப்பதாகவும் அமைந்துவிட்டது.
மத்திய உள் துறை அமைச்சரிடம் நாம் ஏற்கனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அவரைச் சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்டம், மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம்.
ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளைச் சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்த பின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, டெல்லி செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில்,"தமிழ்நாட்டில் மருத்துவ கல்விக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கோரி தமிழ்நாட்டில் இருந்து அனைத்து கட்சி குழுவினர் டெல்லி செல்கின்றோம். இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையிலான தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கட்டாயம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு இருந்து அது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் மற்றும் அனைத்து கட்சியினரும் விரும்புவது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். ஏற்கனவே சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிச் சூழல் உள்ளது.
மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை கட்டாயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை நம்பி செல்கின்றோம்." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Covid-19 India: ஓராண்டை நிறைவு செய்த தடுப்பூசி திட்டம் - சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு