சென்னை வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகரில் வசித்து வருபவர் சுபாஷினி (வயது 42). இவர் மாம்பலம் ரயில் நிலையத்தில் கிளார்க்காக பணிப்புரிந்து வருகிறார். வழக்கம் போல் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கிண்டி ரயில் நிலையம் வரை சென்று ரயிலில் ஏற நடைமேடையில் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் நடந்து வந்த ஒரு மர்மநபர் மற்றும் முகத்தை மூடிய பெண் ஆகியோர் காவல் ஆய்வாளர் அழைப்பதாகக் கூறி சுபாஷினியை அழைத்துள்ளனர். சுபாஷினி வரமறுக்கவே வலுக்கட்டாயமாக இழுக்க முயன்றுள்ளனர். சுபாஷினி கூச்சலிடவே அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே காவலர் மர்ம நபரை பிடித்தனர் ஆனால் முகமூடி அணிந்த பெண் தப்பியோடிவிட்டார்.
மர்மநபரிடம் செய்யப்பட்ட விசாரணையில் அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஜீவானந்தம் என தெரியவந்தது. அவர் கூறியதாவது ’’தனது நண்பர் பாலகுரு அளித்த தகவலின் பேரில் தனது காரில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சவாரிக்காக காவல் ஆய்வாளர் உடையில் கையில் விலங்குடன் இரண்டு பெண்கள் முகமூடி அணிந்து ஏறினர். பின்னர் இன்னொரு பெண்ணும் ஏறி இவர்கள் சுபாஷினியை கைது செய்யவேண்டும் எனவும் அதற்கு உதவ வேண்டும் எனவும் என்னிடம் கூறினர். பின்னர் சுபாஷினியை வீட்டிலிருந்து நோட்டமிட்டு வந்து ரயில் நிலையத்தில் நிறுத்த சொல்லி தன்னையும், முகமூடி அணிந்த பெண்ணையும் சென்று சுபாஷினியை கைது செய்து வருமாறு காவலர் உடை அணிந்த பெண் கூறினார்’’ என்றார். ஜீவானந்தம் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர் பாலகுருவை பிடித்து விசாரிக்கும்போது அவர் தனது நண்பர் சத்யா கூறியதால் அழைத்துச் செல்லுமாறு கூறியதாக கூறினார். பின்னர் கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து 3 பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி!