விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதிமுக பிரமுகர்கள் இருவர் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிமுக பிரமுகர் கலியபெருமாள், முருகன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே முன்விரோதத்தினால் சிறுமி ஜெயஸ்ரீ தீ வைத்துக் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே இக்கொலையைச் செய்திருப்பதாக கைது செய்யப்பட்டிருப்பதால், நேர்மையாக இவ்வழக்கை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்தக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, இனி இத்தகைய கொலை பாதகங்களைச் செய்ய நினைப்பவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை பயங்கரவாதிகளாகக் கருத வேண்டும்'