உற்பத்தி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் புவிசார் குறியீடு விளங்குகிறது.
புவிசார் குறியீடு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மூலம் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான, அகில இந்திய நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 359 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பொருட்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 41 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று கர்நாடகா மாநிலம் முதலிடத்திலும், 33 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 31 பொருட்களைப் பதிந்து தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள புவிசார் குறியீடு நிறுவனத்தின் துணை பதிவாளர் சின்னராஜா ஜி. நாயுடு இடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,
"குறிப்பிட்ட பகுதியில் விளையும் அல்லது தயாரிக்கப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் அந்த பொருட்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடிவதோடு வெளிநாடுகளில் சந்தைப்படுத்தப்படுவதால் அந்த பொருளின் தயாரிப்பாளருக்கு பொருளாதாரம் உயரும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அதிக பொருட்கள் பதியபட்டுள்ளன. புவிசார் பதிவு பெற்ற பொருட்களை வேறு இடங்களில் உற்பத்தி செய்யக் கூடாது. மீறினால் குறைந்தபட்சம் 2 வருடம் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரோனி, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஊட்டி வறுக்கி, சீரக சம்பா உள்ளிட்ட 20 பொருட்களுக்கான மனு பரிசீலனையில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. தமிழகத்தில் நிறைய பொருட்கள் பதிவு செய்யாமல் உள்ளது. எனவே தொழில் மேன்மை கருதியும், உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தெரிவித்து புவிசார் குறியீடு பெற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.