சென்னை: மதுரவாயல் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கார் திருட்டில் ஈடுபட்டுவந்த ராகுல், முகமது ரபிக், வெங்கடேசன் ஆகிய மூன்று பேரை மதுரவாயல் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்த நிலையில் மூன்று பேரும் சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுரவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபால், காவலர்கள் தும்பப்பன், ஹரிதாஸ் ஆகியோர் அங்குச் சென்றனர். அப்போது, காவல் துறையினர் சென்ற காரினை திருடர்கள் மூன்று பேரும் கற்களால் தாக்கியுள்ளனர்.
வாகனத்திலிருந்து இறங்கிவந்த காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். உடனடியாக காவலர்கள் துரத்திச் சென்று வெங்கடேசனை மட்டும் பிடித்து கைதுசெய்தனர்.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று வெங்கடேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ராகுல், முகமது ரபீக் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர். இதில் தப்பியோடிய ராகுல் மீது 23 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும், மூவர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காயம் விளைவித்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்து காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாகத் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல், பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வந்தது மூன்றாவது விமானம்: உக்ரைனில் இருந்து 240 மாணவர்கள் நாடு திரும்பினர்