சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர், சிவபாலன் (28). இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அண்ணாசாலை எஸ்.பி.ஐ வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது. இதுதொடர்பாக சிவபாலன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அண்ணா சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவபாலனிடம் பணத்திற்குண்டான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதும், சிவபாலன் குருவியாக செயல்பட்டதும் காவல் துறையினருக்குத்தெரியவந்தது. மேலும், குருவிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த 6 நபர்கள் 4 இருசக்கர வாகனத்தில் 70 முதல் 80 கி.மீ., வேகத்தில் பாரிமுனைப்பகுதியிலிருந்து தனித்தனியாக பின் தொடர்ந்து வந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் ஆய்வு: மேலும் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை கொள்ளையர்கள் பயன்படுத்தியதால் காவல் துறையினர் அவர்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து குருவிகளை குறிவைத்து பணப்பறிப்பில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படத்தோடு ஒப்பிட்டபோதும் யாரும் சிக்கவில்லை. இதனையடுத்து அடுத்தகட்டமாக பாரிமுனை முதல் குரோம்பேட்டை வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்களை ஆராய்ந்து, அதில் சந்தேகப்படும் படியாக தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்களை சேகரித்தனர்.
இருந்தபோதிலும் காவல் துறையினருக்கு துப்பு கிடைக்காமல் தவித்தனர். சுமார் 15 நாள்களாக ஒருவித துப்பும் கிடைக்காமல் தவித்த காவல் துறையினர், அடுத்தகட்டமாக குருவியிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட பழைய குற்றவாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பழைய குற்றவாளிகள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். கொள்ளையடிக்க புதுவித டெக்னிக்கை கையாளுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
புதுவித டெக்னிக்: குறிப்பாக கூகுளில் விர்ச்சுவல் எண் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் வேறு நாட்டு எண்ணை எடுத்து அதன் மூலமாக வாட்ஸ்அப் தொடங்குவதாக தெரிவித்தனர். இதனைக்கேட்ட காவல் துறையினர் அதிர்ந்துபோயினர். மேலும், அந்த வாட்ஸ்அப் கால் மூலமாக தகவல் பரிமாறி கொள்ளையர்கள் திட்டம் தீட்டி கொள்ளையடித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர், லொக்கேஷனை வைத்து செல்போனின் ஐபி முகவரியை ஆராய்ந்தனர். அதில், கொள்ளையர்கள் பாரிமுனைப்பகுதியில் வந்து செல்வது காவல் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அங்கு 5 நாள்கள் முகாமிட்ட தனிப்படை காவல் துறையினர், சிவகங்கையைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வாட்ஸ்அப் காலில் சுரேஷ் என்பவரிடம் இருந்து வரும் தகவலுக்கு ஏற்ப சம்பவ இடத்திற்குச்சென்று கத்தியைக்காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர். மேலும், பணப்பறிப்பில் ஈடுபட்டால் 10 விழுக்காடு கமிஷன் கிடைப்பதாகவும் பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஏற்கெனவே விசாரணை செய்த டவர் லொக்கேஷனை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது சினி ஏஜெண்ட் சுரேஷ், அடிக்கடி ராஜேஷ் என்பவரிடம் பேசி வந்ததைக் கண்டுபிடித்தனர். பின்பு சினிமா துறையில் ஏஜெண்டாக பணியாற்றி வந்த சுரேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.77 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் சினிமாவில் ஆள்களை திரட்டும் பணியில் ஈடுபடுவதும், அதில் வரும் இளைஞர்களை ஆசை வார்த்தைக் கூறி தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாஸ்கர், குட்டி சரவணன், சவுத்ரி என்ற வசந்த் ஆகிய மூன்று பேர் என மொத்தம் ஏழு பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பஜாரில் இருந்து குருவி, பணத்தை பெற்றுக்கொண்டு செல்லும் தகவலை ’அய்யர்’ எனப்படும் கும்பலின் தலைவன், விர்ச்சுவல் எண் கொண்ட வாட்ஸ்அப் காலில் ’சாமி’ என்ற கோர்ட்வேர்டில் அவரின் இருசக்கர வாகன அடையாளங்களை தங்களுக்குத் தெரிவிப்பார்.
அதன்பிறகு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, பல்லவன் சாலை உள்ளிட்ட இடங்களில் குழுவாகப் பிரிந்து கான்ஃபெரன்ஸ் காலில் பேசிக்கொண்டு குருவியை வழிமறித்து, கத்தியால் வெட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக வாக்குமூலம் அளித்தனர்.
குறிப்பாக சாதாரண வாட்ஸ்அப் காலில் பேசினால் காவல் துறையினரிடம் சிக்கிக்கொள்வோம் என்பதை அறிந்து விர்ச்சுவல் எண் கொண்ட செயலியைப்பதிவிறக்கம் செய்து, வெளி நாட்டு எண்களாக மாற்றி அந்த எண்ணை வைத்து வாட்ஸ்அப் தொடங்கி தகவல் பரிமாறி கொள்வதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதேபோல பல்லாவரம், அண்ணாசாலை, பெரியமேடு, சிந்தாதிரிப்பேட்டை ஆகியப்பகுதிகளில் குருவிகளை மட்டுமே குறிவைத்து கத்தியைக் காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் பல குருவிகள் ஹவாலா பணம் என்பதால் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைதான ஏழு பேரிடம் இருந்து ஆறு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்தக் கொள்ளை கும்பலின் தலைவனை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் நடுரோட்டில் சுற்றித்திரிந்த ரகளை ஆசாமிகள்