சமூக வலைதளங்களில் சமீப காலமாகப் பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்கள் நிரம்பி வழிகின்றன. ஏற்கெனவே பாலியல் புகார்களில் சிக்கிய 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஒருபுறமிருக்க தற்போது சமூக வலைதளங்களில் நிரம்பியிருக்கும் நபரின் பெயர், கேம்மர் மதன்.
கடந்த 2 ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைதளங்களில் சிறுமி, சிறுவர்கள் மூழ்கி உள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
இத்தகைய கேம்களால் தகவல் லீக் ஆகுவதாகவும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து, பப்ஜி உள்ளிட்ட சில கேம்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், சிலர் சட்டவிரோதமாக வி.பி.என் ஆப்பை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.
பப்ஜி நேரலையில் மதன்
கேம் எப்படி விளையாட வேண்டும் எனத் தெரியாதவர்கள் பலர் யூ-ட்யூப்பை பார்த்து கற்றுக் கொள்வது வழக்கம். இந்த பப்ஜி விளையாட்டை நேரலையாக, மதன் என்பவர் தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் ஒளிபரப்பி வந்தார்.
இந்தச் சேனலை 7 லட்சத்தும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். ஆனால், அதன்பிறகு இதே போல் பல சேனல்கள் வந்ததால் மதனின் சேனலுக்குப் பார்வையாளர்கள் குறைந்தனர்.
18+ சேனல் ஆரம்பம்
இதனை மீட்டெடுப்பதற்காக மதன் 18+ என்ற சேனலை உருவாக்கி அதில் பப்ஜி கேம் விளையாடுவதை நேரலையாக ஒளிபரப்புவது மட்டுமில்லாமல் ஆபாசமாகவும் பேசி பதிவிடுகிறார்.
12 வயதிலிருந்து 20 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் மட்டுமே இருப்பதால், அந்தச் சேனலுக்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இணைந்து மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
பெரும்பாலான பார்வையாளர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்களை கவர்வதற்காகப் பெண்களைக் குறித்து மிகவும் இழிவாகப் பேசி பதிவிடத் தொடங்கினார்.
ஆதரவற்றோருக்கு உதவி செய்யுங்கள்
இதுமட்டுமின்றி கேம்மில் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இருப்பதாகவும், உங்களால் முடிந்த பணத்தை அனுப்ப வேண்டும் என்கிற வகையில் பேசி, பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
யூ-ட்யூபர் மதனின் ஆபாச உரையாடல்
மேலும், யூ-ட்யூபர் மதன் சிறுமிகளிடம் பிரைவேட் சேட்டில் ஆபாச உரையாடல் நடத்திப் பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தனது லீலைகளை மதன் ரகசியமாக வைத்து வந்துள்ளார்.
தொடர்ச்சியாக, மோசடி செயலிலும், பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மதன் மீது ஏராளமான புகார்கள் குவியத் தொடங்கின.
களத்திலிறங்கிய புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு
சமூக வலைதளங்களில் மதனுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில்,புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவிற்கு புகார் ஒன்று வந்துள்ளது.
அந்தப் புகாரில், பெண்களை இழிவாகப் பேசியும், சிறுவர்களை தவறான பாதைக்கு அழைத்தும் செல்வதால் கேம்மர் மதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக இன்று(ஜுன்.14) காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மதனுக்குப் புளியந்தோப்பு சைபர் பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
குறிப்பாக கேம்மர் மதன் சிறுமிகளை ஏமாற்றிப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டாரா? 18+ சேனல் என்று பதிவிட்டாலும் முறையாக யூ-ட்யூப் நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் ஒளிபரப்பி வருகிறாரா? சிறுவர்கள் பலர் 18 வயதைக் கடக்காமல் வயதை மாற்றி வீடியோ பார்த்து வருவது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தப்ப முயன்ற பிரபல ரவுடி... தடுக்கி விழுந்து கை, கால் முறிவு