சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையாளர் லலிதா, அனைத்து கட்சியினர் முன்னிலையில், நேற்று (அக்.27) ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.
சென்னை மாநாகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட வாக்காளார் பட்டியலின்படி, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 19,09,911 ஆண் வாக்காளர்கள், 19,65,149 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,68,178 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் கூறப்படுவது, “சென்னை மாவட்டத்தில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஏற்கனவே ஜனவரி மாதம் அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,09,512, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,71,653, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,112 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38,82,277 ஆகும்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில், சென்னை மாவட்டத்தில் 16,935 ஆண் வாக்காளர்கள், 17,911 பெண் வாக்காளர்கள், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 34,866 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 24,536 ஆண் வாக்காளர்கள், 24,415 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 48,963 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் 19,09,911 ஆண் வாக்காளர்கள், 19,65,149 பெண்வாக்காளர்கள் மற்றும் 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,68,178 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக எண்-18 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,70,254 வாக்காளர்களும், அதிக பட்சமாக எண்-26 வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,460 வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும், புதியதாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில்
டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதனையடுத்து, இந்த முகாம் நாட்களில் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கும் இந்த இணையதள முகவரி – https://voters.eci.gov.in/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மாவட்ட வாரியாக வாக்காளர்கள் முழு விவரம்!