kதமிழ்நாட்டில் முழ ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் குழு, அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டத்தில் எம்எல்ஏக்களின் கருத்துக்களை பார்க்கலாம்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: அதிமுக சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தினோம். கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், அப்போதுதான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். கரோனா பரிசோதனையை அதிகமாக்க வேண்டும். நிறைய மருத்துவமனைகளை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை மையங்கள் கொண்டு வர வேண்டும். வீட்டு கண்காணிப்பு, பொறுத்தவரை கிராமப்புறத்தில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளியே வராத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆக்ஸிஜன் வழங்குவது முறையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன்:
ஊரடங்கு அமல்படுத்தும் வேளையில் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் தெரிவித்துள்ளோம். வீடுகளில் கேஸ் சிலிண்டர் போடுபவர்களை முன்களப் பணியாளர்கள் வரிசையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மிக வலுவான கட்டமைப்போடு, ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கரோனா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இருக்க வேண்டும். மக்களுக்கு பாதிக்காத வகையில் அது இருக்க வேண்டும். காவல் துறையினர் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி:
கடந்த 10ஆம் தேதி முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. கடந்த 3 நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு இருந்தாலும் சரியாக நடைமுறை படுத்தவில்லை. 24ஆம் தேதிக்கு பிறகு 1 வாரம் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளோம்.
புரட்சி பாரதம் சட்டப்பேரவை உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி:
காலை 10 மணி வரை வெளியில் செல்லலாம் என்ற அறிவிப்பைக்கூட ரத்து செய்து ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என கூறியுள்ளோம். ஆக்ஸிஜன் ஆலைகளை மாவட்டங்கள் தோறும் கொண்டுவர வேண்டும். தடுப்பூசி போட இன்னும் மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளோம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் கடுமையான ஊரடங்கு