சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க சென்னை மாநகராட்சியில் கிருமி நாசினி தெளிப்பது, காணொலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஆகவே சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும், சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் அரசு அறிவுறுத்தலின்படி முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை ரிப்பன் பில்டிங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாட்டுப் படகுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி - தமிழ்நாடு அரசு