சென்னை: அதிர்ந்துகூட பேசாத ஸ்டேன் சுவாமியின் வாழ்க்கை விளிம்புநிலை, ஏழைமக்களின் உயர்வுக்கு உறுதியளித்தது. வளமான காவிரி டெல்டாவில் பிறந்த ஸ்டேன் சுவாமியின் வாழ்வு ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்வியறிவற்ற பழங்குடியினர் மத்தியில் பாசாங்கு காட்டாத புத்திஜீவியாகவே ஸ்டேன் சுவாமி இருந்தார்.
இயேசு சபையின் உத்தரவுப்படி அவர் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தாலும், அந்த அடையாளத்தை அவர் தூக்கிக்கொண்டு சுமக்கவில்லை. திருச்சபை தனது சொத்துக்களை ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும், சமூக மாற்றத்தில் திருச்சபை முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் பேசிய புரட்சிகர பிரசில்லிய பேராயர் ஹெல்டர் கேமராவுடன் இணையும் வாய்ப்பு பிரேசிலில் ஸ்டேன் சுவாமி படிக்கும்போது கிடைத்தது.
அந்தக்காலத்தில், இடைநிலைக் கல்வியை முடித்தவர்கள் இயேசு சபையில் சேர முடியும். இந்நிலையில், திருச்சி செயின்ட் ஜோசப் உயர் நிலைப்பள்ளியில் படித்துமுடித்த பின்பு இயேசுசபையில் ஸ்டேன் சுவாமி இணைந்தார்.
"அவர் தமிழ்நாட்டில் இருப்பதைவிட ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் இருந்து செயல்படவே விரும்பினார். ராஞ்சியில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை ஏழு ஏக்கர் பரப்பளவில் அவர் அமைத்துள்ளார்.
ஆளும்வர்க்கத்தை எதிர்த்து தங்களுடைய உரிமையை கேட்க பழங்குடியினரை ஒருங்கிணைத்தது, நேதர்ஹாட் மலைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு பயிற்சி மைதானத்துக்கு எதிராக போராடியதுமே அவருக்கும் அதிகார வர்க்கத்திற்குமான முரண்களை தொடங்கிவைத்தது.
அதுமட்டுமல்லாமல், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் சிறைகளில் ஏறக்குறைய 3ஆயிரம் பழங்குடியின இளைஞர்கள் மாவோயிஸ்டுகள் எனச் சிறை வைக்கப்பட்டதை எதிர்த்தும் சட்டப்போராட்டம் நடத்தினார்" என்று ஸ்டேன் சுவாமி குறித்து விவரிக்கிறார் பாதிரியாரும், சமூக கண்காணிப்பகத்தின் இயக்குநருமான ஜான்குமார்.
மேலும், "தனது புத்தகங்களுடனும் உடைமைகளுடனும் அவர் கடினமான வாழ்க்கையை வாழ்ந்தார். சமூக மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்ற தீரா ஆர்வம் அவரிடம் இருந்தது. சமூக ஆர்வலர்களுக்காக அவர் வழங்கிய மூன்று மாத பயிற்சி திட்டம் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் நல்ல குடிமை சமூகத்தை உருவாக்கியுள்ளது. எங்களில் பலரை அவர் அடையாளம் கண்டு வார்த்தெடுத்தார்" என்கிறார் அவர்.
சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் தலைமைகளுடன் நல்ல நட்புறவு ஸ்டேன் சுவாமிக்கு இருந்ததையும், பயிற்சி திட்டத்தில் விரிவுரைகளை வழங்க அவர்களை அழைத்தையும் பசுமை நினைவுகளாக பகிர்கிறார் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் இயேசு சபையின் உறுப்பினர் எ.சாமி.
ஸ்டேன் சுவாமி ஒரு மகிழ்ச்சியான ஆளுமை மிக்க மனிதர். அன்று இயேசுசபையில் உறுப்பினராக இணைபவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரித்தார். நல்லவேளையாக அதில், பெரும்பாலானவை தற்போது நடைமுறையில் இல்லை.
"எங்கள் காலத்தில் இரவு உணவுக்குப்பிறகு சுருட்டு புகைக்கவேண்டும். இது இயேசுசபை உறுப்பினர்களின் வாழ்வின் ஓர் அங்கம். நீங்கள் புகைப்பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பண்பாடில்லாதவராக பார்க்கப்படுவீர்கள்" என 80களின் பிற்பகுதியில் அவர் நடத்திய பயிற்சித் திட்டத்தில் மெல்லிய குரலில் வெளிப்படுத்தினார்.
ஸ்டேன் சுவாமியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இன்னும் அவருடைய சொந்த ஊரில் உள்ளனர். மண்ணின் மகனுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர். அவருடைய சகாக்களுக்கும், தோழர்களுக்கும் அவர் என்றென்றும் உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார்.
இதையும் படிங்க: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் தான் ஸ்டான் சாமியை கொன்றது - திருமாவளவன் எம்பி