சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் கேரளா ஆயுர்வேத வைத்திய சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணியாளர்கள் முதல் தளத்தில் உள்ள அறையில் கதவை திறந்து வைத்துக் கொண்டு இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அறைக்குள் செல்லும் போது தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது விழுந்து உள்ளார். இதில், தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் அறையில் இருந்து அலறி அடித்துக் கொண்டு மொட்டை மாடி வழியாக தாவி குதித்து ஓடுவதை பார்த்துள்ளனர்.
பின்னர், அங்கு இருந்த நபர்களின் உதவியுடன் மர்மநபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த மர்ம நபரின் கையில் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் இருந்துள்ளது. அதை வாங்கி பார்த்த போது வைத்தியசாலையில் பயன்படுத்தும் லேப்டாப், செல்போன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிடிபட்ட திருடனை ரோந்து பணியில் இருந்த பீர்க்கங்கரணை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
மேலும், அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்தபோது நானும் என் நண்பனும் ஆட்டோவில் வந்ததாகவும், எனக்காக என் நண்பன் ஆட்டோவில் காத்துக் கொண்டிருக்கின்றான் எனக் கூறியுள்ளார். சிறிது தூரத்தில் ஆட்டோ நின்று கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அங்கு சென்று ஆட்டோவை சுற்றி வளைத்து ஆட்டோவில் இருந்த நபரை பிடித்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் படப்பை வஞ்சுவான்சேரி பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும், இவர் அதே பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் சூர்யாவின் நண்பர் கோயம்பேடு குணசேகரபுரம் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (23) என தெரியவந்தது.
இவர்கள் இருவர் மீதும் குற்றப் பின்னணி இருக்கின்றதா என பார்த்தபோது, எந்த காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகள் பதிவு ஆகாமல் இருந்ததால், இருவரும் முதல் முறையாக லேப்டாப் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் எண்ணினர். இருந்தும் இவர்கள் மீது சந்தேகம் தீராதால் புஷ்பராஜை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து உள்ளனர்.
அப்போது, நான் எந்த தவறும் செய்யவில்லை. சூர்யா தான் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு என்னை கோயம்பேட்டில் பார்க்க வந்த போது ஆட்டோ ஒன்றை திருடி உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஒரு வருடங்களாக வட மாநில தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பதை தொழிலாக கொண்டு வந்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை என்னை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் சூர்யாவை தனியாக அழைத்து நீயும் உன் நண்பனும் சேர்ந்து செய்த கொள்ளை சம்பவம் குறித்து அனைத்தும் கூறிவிட்டார் என போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒரு வருடமாக வட மாநில தொழிலாளர்களிடம் நான் கத்தியை காட்டி செல்போன் பறித்து விட்டு அதனை புஷ்பராஜிடம் கொடுத்து விடுவேன். அவர் அதை விற்று எனக்கு பணம் தருவார்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை பார்க்க சென்ற போது அவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டோ ஒன்றை திருடுவதற்கு திட்டம் தீட்டி கொடுத்ததாகவும் கூறினார். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் ஆட்டோவில் சென்று தனியாக செல்லும் வட மாநில நபர்களை குறி வைத்து கத்தியை காட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார்.
மேலும், விசாரணையில் புஷ்பராஜ், சூர்யா இருவரும் சிறுவயதில் அவர்கள் இருக்கும் பகுதியில் கொள்ளை சம்பவம் ஒன்றை அரங்கேற்றிவிட்டு சீர்திருத்த பள்ளிக்கு சென்ற போது இருவரும் நட்பாக இணைந்து வெளியில் வந்ததும், சிறு சிறு கொள்ளை சம்பவங்களை செய்து விட்டு போலீசில் சிக்காமல் இருந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
தற்போது கத்தியை காட்டி செல்போன் பறிப்பில் ஈடுபடுவதற்காக பெருங்களத்தூர் வரும்பொழுது ஆட்டோவில் பெட்ரோல் தீர்ந்ததால் சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடி கொண்டிருந்துள்ளனர். அப்போது மாடியில் ஒரு வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்ததும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு வரும் போது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
தீரன் படத்தில் வரும் காட்சியை போல் போலீசார் இரு குற்றவாளிகளில் தனித்தனியாக விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எங்கெங்கு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளார்கள் என கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட காட்சியும், வீடு புகுந்து திருடுவதற்கு நோட்டம் விடும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கடலூரில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை - காரணம் என்ன?