சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (பிப்ரவரி 21) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69 ஆயிரத்து 482 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 788 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 27 லட்சத்து 91 ஆயிரத்து 708 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 45 ஆயிரத்து 717 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
2,692 பேர் குணமடைந்தனர்
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 33 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 2,692 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 93 ஆயிரத்து 703 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். இவருடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 981 என உயர்ந்துள்ளது.
சென்னையில் 191 பேருக்கு பாதிப்பு
புதிதாக சென்னையில் 191 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 115 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 86 நபர்களுக்கும், திருவள்ளூரில் 33 நபர்களுக்கும், திருப்பூரில் 29 நபர்களுக்கும், திருச்சியில் 23 நபர்களுக்கும், ராணிப்பேட்டையில் 30 நபர்களுக்கும், ஈரோட்டில் 38 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 22 நபர்களுக்கும், நாமக்கல்லில் 22 நபர்களுக்கும் எனப் பாதிப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் எண்ணிக்கை மாநில அளவில் 1.2 விழுக்காடு எனப் பதிவாகியுள்ளது. மாநில அளவில் மிகக் குறைந்த அளவாக பெரம்பலூர், திருப்பத்தூரில் 0.1 விழுக்காடு என நோய்த்தொற்றுப் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் அறிவிப்புகள் என்ன?