சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவர்கள் வேலைகிடைக்காமல் காத்திருக்கும் நிலைமைத்தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் தொழிற்சாலைக்குத்தேவையான திறன்கள் இல்லாததால் வேலைக் கிடைப்பதிலும் பெரிதும் சிக்கல் நிலவுகிறது.
சென்னை ஐஐடி தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், அதற்கான பயிற்சியை வழங்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித்தருவதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு சான்றிதழ் படிப்புகளை தொடங்கியுள்ளது.
சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சென்னை ஐஐடியின் ப்ரவர்த்தக் டெக்னாலாஜிஸ் பவுண்டேசன் 6 மாத காலம் இலவசமாக வழங்க உள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப்பேட்டியில்,
“சென்னை ஐஐடியில் உள்ள ப்ரவத்தக் டெக்னாலாஜிஸ் பவுண்டேசன் சார்பில் பொறியியல் படிப்பினை முடித்த மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெறும் வகையில் திறன் வளர்ப்புப்பயிற்சி 6 மாத காலம் வழங்கப்பட உள்ளது. இதற்காக Finishing School என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் 60 விழுக்காட்டிற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக சோனி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளது. சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு படிக்கும்போதே உதவித்தொகையும் வழங்கப்படும். 2020-21,2021-22ஆம் கல்வியாண்டில் 60 விழுக்காடு மதிப்பெண்களைப்பெற்று, பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ள மாணவர்கள் ’https://sonyfs.pravartak.org.in/registration‘ என்ற தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு enquiry@pravartak.net என்ற மின்னஞ்சலிலும், 90436 74267 எனும் எண்ணிற்கும் தொடர்புக் கொள்ளலாம். தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மையத்தில் நேரடியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் சோனி நிறுவனத்திற்கு 15 மாணவர்கள் வேலைக்கு அனுப்பப்படுவார்கள். மற்ற மாணவர்களுக்கு சென்னை ஐஐடியால் வேலை வாய்ப்பு உருவாக்கித்தரப்படும். இதுமட்டுமின்றி, மாணவர்கள் திறன்களை வளர்க்கும் வகையில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது”, எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவம் சார்ந்த படிப்புகளில் வேலைவாய்ப்பு எப்படி?