அனைத்து வேலை இடங்களிலும், பொது இடங்களிலும், போக்குவரத்தின்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கரோனா பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் துணி முகக்கவசங்களை இலவசமாக வாங்குவதற்கும் வழங்குவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பராமரிக்கப்படும் தரவுத் தளத்தின் அடிப்படையில், சுமார் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
தலைக்கு இரண்டு நல்ல தரமான மறுபயன்பாட்டு துணியாலான முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த நோக்கத்திற்காக சுமார் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள வாங்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, கூடிய விரைவில் முகக்கவசம் நியாயவிலைக் கடைகளில் விலை இல்லாமல் தரப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.