60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துவரும் நிலையில், அவர்களின் உதவியாளர்களும் இனி இலவசமாகப் பயணிக்கலாம் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் உதவியாளர்கள் போக்குவரத்துக் கழகத்தில் சான்றிதழை காண்பித்து இலவச பயண அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, வயது மூப்பு காரணமாக, சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகள், தமிழறிஞர்கள், எல்லை காவலர்கள் ஆகியோரது உதவியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
அதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில், போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின்போது பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மேற்கண்ட பிரிவின்கீழ் இலவச பயணம் செய்யும் பயனாளர்களின் உதவியாளர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் தற்போது உதவியாளர்கள் போக்குவரத்து கழகங்களில் இலவச பயண அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.