சென்னை: சமூக வலைதளங்கள் வாயிலாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஈரோடு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் போட கூறி பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றது.
இதேபோல் சென்னை மாநகராட்சி மேயரான பிரியாவின் புகைப்படத்தை டிபி யாக வைத்து மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக மேயரின் உதவியாளர் சிவசங்கர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் மாநகராட்சி மேயரின் புகைப்படத்தை டிபியாக வைத்துக்கொண்டு மோசடி கும்பல் வாட்ஸ் அப் மூலமாக மண்டல அதிகாரிகளிடம் வழக்கம் போல பேச தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு அமேசான் கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் அனுப்ப வற்புறுத்தியதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த மண்டல அதிகாரிகள் மேயர் பிரியாவிடம் இது குறித்து தகவல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மேயர் பிரியாவின் சார்பில் உடனடியாக பெரியமேடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்ற மோசடி தொடர்வதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர்களை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:JEE தேர்வில் முதலிடம் பிடித்த கோவை மாணவிக்கு பாராட்டு விழா