சென்னை: கோயம்பேடு சின்மயா நகரில் கடந்த 8ஆம் தேதி இரவு, 6 பேர் கொண்ட கும்பல் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கி உள்ளது. இதில் அந்த இளைஞர் மயங்கி கீழே விழுந்துள்ளார். ஆனாலும் அக்கும்பல், அந்த இளைஞரின் பைக்கை உடைத்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள்ளது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு காவல் துறையினர், மயங்கிய நிலையில் இருந்த இளைஞரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த இளைஞர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சிவனேசன் (22) என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், இவர் கோயம்பேடு சின்மயா நகரில் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்ராஜ் (25), அரிஷ் (22), பச்சையப்பன் (23) மற்றும் தனுஷ் (22) உட்பட 6 பேர் கொண்ட கும்பல், இரண்டு பைக்கில் வந்து சிவனேசனை சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல், அவரது பைக்கையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அஜித்ராஜ், அரிஷ், பச்சையப்பன் மற்றும் தனுஷ் ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் (மே 10) கைது செய்துள்ளனர். பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘தங்கள் ஏரியாவில் யார் தாதா?’ என்ற பிரச்னை நீண்ட நாட்களாக இவர்களுக்குள் நீடித்து வருவதாகவும், சிவனேசன் ஏரியாவில் ரவுடி போல் கெத்தாக சுற்றி வந்து இவர்களை தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Cyber Crime: இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!