சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி பாடசாலை பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்த மாத்தூரைச் சேர்ந்த தனுஷ் (15), சின்ன சேக்காட்டைச் சேர்ந்த ஜெயபாரதி (15), கோகுல் நாத் (15), மணலி பெரிய தோப்பைச் சேர்ந்த சுனில் குமார் (15) ஆகிய மாணவர்கள், மணலி பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக மாணவன் ராகேஷின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும்போது வந்த ராட்சத அலை நான்கு பேரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் கூச்சலிட, உடனே அப்பகுதி மீனவர்கள் மாணவர்களை தேட ஆரம்பித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவன் தனுஷ் கடற்கரையிலுள்ள பாறைகளின் நடுவில் சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் தகவலறிந்து அங்கு வந்த திருவொற்றியூர் காவல் துறையினர் மற்ற மூன்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடல் உடற்கூறு ஆய்விற்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.