சென்னை: கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது மோதியது.
இதில் தலை சிதறி அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல எண்ணூர் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில இளைஞர் மீது விரைவு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் அதே தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்தனர்.
இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் வடமாநிலத்தவர் என்பதும் மற்ற இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த 15 மணிநேரத்தில் நான்கு பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
ஏற்கனவே ரயில் தண்டவாளங்களில் சட்டத்துக்கு புறம்பாக விபத்துகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை கோட்டம் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதில் ஒரு பகுதியாக ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்து இருந்தனர்.
ஆனால் பொதுமக்கள் சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளத்தை கடந்து வருவதால் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 'சட்டத்தை மீறி தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். ரயில்வே காவல்துறையினர் ரோந்து பணியை சரிவர செய்யாததே இது போன்ற உயிரிழப்புக்கு காரணமாகிறது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் நகராட்சியை விரிவாக்கம் தீர்மானம் நிறைவேற்றம்