சென்னை: தியாகராய நகரில், சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று (அக்.28) சில மர்ம நபர்கள் அலுவலக வளாகத்தில் கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசி கூச்சலிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனின் ஓட்டுநர் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், R1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், சாலையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதல் அரசியல் ரீதியாகவா அல்லது தனிநபருக்கான தாக்குதலா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது அலெக்ஸ் (22), பாரதிராஜா (20), நாகராஜ் (21), பார்த்திபன் (21) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கட்சி அலுவலகத்தின் உள்ளே இருந்த முருங்கை மரத்திலிருந்து கம்பளி பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், அதனை வெட்டக் கூறி குடியிருப்புவாசிகள் கேட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் 2 நாட்களுக்கு முன்னர் முருங்கை மரத்தை வெட்டி அகற்றி உள்ளனர்.
இந்நிலையில், அருகில் இருந்த செடிகளிலிருந்தும் கம்பளி பூச்சிகள் வருவதாகக் கூறி அலுவலக காவலாளியிடம் புகார் அளித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், அலுவலகம் மீது கற்கள் மற்றும் காலிபாட்டில்களை வீசியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம்!