தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்ளப்படும்.
அதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபாலிடம் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு திருக்கோயில் பெயரிலும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
2022-2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, "ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதி வசதி குறைவாக உள்ள 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதி குறைவாக உள்ள மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு. இரா. கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகனின் உடல் அவரது முதல் மனைவியிடம் ஒப்படைப்பு