இது குறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் உயர்வின் மீதும் எல்லையற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த ஏ.ஆர். லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் புகழ்மிக்கத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்தும் ஆய்வு செய்ய நீதியரசர் ஆனந்த் தலைமையில் உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்தபோது, தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் நியமிக்கப்பட்டார்.
கடுமையாக உழைத்து, ஆவணங்களை எல்லாம் ஆய்வு செய்து தமிழ்நாட்டின் உரிமை குறித்தும், அணை வலுவாக இருக்கிறது என்றும், புதிய அணை கட்டத் தேவை இல்லை என்றும் அவர் கொடுத்த அறிக்கைதான் தமிழ்நாட்டுக்கு நீதியை நிலைநாட்டியது. தமிழ் மொழி மீதும், இலக்கியங்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இலக்கிய மாநாடுகளில், விழாக்களில் பங்கேற்று உரையாற்றுவார்.
என் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். பலமுறை அவரது இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து உரையாடி இருக்கிறேன். காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இருமுறை கம்பன் விழாவுக்கு என்னை அழைத்துப் பேச வைத்தார். ஆகஸ்டு 25ஆம் தேதி, அவரது துணைவியார் மீனாட்சி ஆச்சி மறைந்தார். அந்தப் பிரிவைத் தாங்க முடியாத அதிர்ச்சியால் அவரது இதயம் இன்று செயலிழந்துவிட்டது.
ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்து தாங்க முடியாத துக்கத்தில், வேதனையில் துடிக்கும் அவரது மகன் வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த துயரத்துடன் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.