சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பாதிக்கப்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்ட களத்தில் பேசிய விஜயபாஸ்கர், "ஓமந்தூரார் மருத்துவமனையை கரோனா மருத்துவமனையாக மாற்றியவுடன் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பயந்து ஓடி விட்டனர். மருத்துவமனை முதல்வர் மட்டுமே பணியில் இருந்தார். ஆனால், ஒப்பந்த செவிலியர்கள் கரோனா முதல் அலையின்போதே, துணிந்து பணிக்கு வந்து பல உயிர்களை காப்பாற்றினர்.
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது சாதாரண ஒன்று, மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. கரோனா முழு உடல் கவச உடையுடன் இரவுப் பணி பார்த்தவர்களை பல ஊர்களில் நின்று போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளி விட்டது. ஒப்பந்த செவிலியர்களை, விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது வேதனை அளிக்கிறது. எம்ஆர்பி தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சமூக இட ஒதுக்கீட்டை பின்பற்றித்தான் அனைவரும் நியமனம் செய்யப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், 'கரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை இரண்டு ஆண்டு ஏழு மாதங்கள் அர்ப்பணித்த ஒப்பந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிரைக் காப்பாற்றும் செவிலியர்களை பணியமர்த்திவிட்டு இப்போது முறைகேடான பணிநியமனம் செய்திருக்கிறோம் என்பது அபத்தம். முறைகேடு உள்ளதாக கூறுவது என்ன என்பதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன தேர்தல் வாக்கு உறுதிப்படி அவர்கள் நடந்து கொண்டால் போதும். வருகிற 9ஆம் தேதி தொடங்க உள்ள பேரவை கூட்டத்தொடரில் பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்தக்கோரி அதிமுக தரப்பில் குரல் எழுப்பப்படும்.
குறிப்பாக பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பேரவையில் குரல் எழுப்புவார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருச்சி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கண்மணி, கடலூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற கர்ப்பிணியும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் முத்து பத்ரகாளி என்பவரும் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் முடிவு - இறுதிகட்ட விசாரணையில் உச்ச நீதிமன்றம்!