சென்னை: எஸ்.பி. வேலுமணி மீது சென்னை, கோவை, சேலம் மாநகராட்சி டெண்டர்களை தனது உறவினர்களுக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில், வேலுமணிக்குச் சொந்தமான வீடு, இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10, 11ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தது.
இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டுவரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 15) விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், எஸ்.பி வேலுமணியின் கூட்டாளிகள் கே.சி.பி. இன்ப்ரா, ஆலம் தங்கம் மற்றும் வைர நிறுவனம் மூலம் சட்டவிரோதமாகப் பணத்தை வங்கிகளில் வைப்பாக வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவைகளை வழக்கு விசாரணை முடியும் வரை பணமாக மாற்ற தடைவிதிக்க வேண்டும். நிறுவனங்கள் மூலமாக வங்கிகளில் வைப்பாக மாற்றும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் எஸ்.பி. வேலுமணி தூண்டுதல் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி ஜே. ஓம்பிரகாஷ், கே.சி.பி. இன்ப்ரா நிறுவனத்தின் 109 கோடி ரூபாய் வைப்புத்தொகை, ஆலம் தங்கம் மற்றும் வைர நிறுவனத்தின் 1.8 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கவும், நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு