சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள், சார்பதிவாளர்கள் ஆண்டு நிதிப்பரிவர்த்தனை அறிக்கை செய்யவேண்டும். இவற்றில் முறையாக கணக்குக் காட்டாத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க டெல்லி வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு விசாரணை துவங்கி இருக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை அறிக்கையும், அதில் முதலீடு செய்யும் மக்களின் தனி நபர் வருமான வரி அறிக்கையும் ஒப்பிட்டு பார்த்து இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடிக்கிறது.
முதற்கட்டமாக கடந்த வியாழக்கிழமை அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் 12 மணி நேரம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளரும், நகரச் செயலாளருமான ஆதி மோகன் தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் சோதனை செய்த போது பல கோடி ரூபாய் கணக்கு காட்டப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் கணக்குகளை ஆய்வு செய்த போது டைம் டெபாசிட்டில் 3.5 கோடி ரூபாயும், ரொக்க முதலீட்டில் 4.5 கோடி ரூபாயும் , மக்களுக்கு கொடுத்த வட்டியில் 5.5 கோடி ரூபாயும் என மொத்தம் 13.5 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர் ஆதி மோகன் நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று முறையாக கணக்கு காட்டாத கூட்டுறவு வங்கியில் பட்டியல் தயாரித்து சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் வெண்புள்ளிகள் இல்லாத நிலை கொண்டு வர நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கடந்த 2021ஆம் ஆண்டு தற்போது விராலிமலை எம்.எல்.ஏவாக உள்ள சி.விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து இருப்பதாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். இதனையடுத்து அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சோத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘வழக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்ற உத்தரவை மீறிய காவலர்கள் மீது எடப்பாடி பழனிசாமி வழக்கு!