தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக திமுகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். கருணாநிதிக்கும் சிலைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
வள்ளுவர் சிலையில் ஆரம்பித்து ராஜராஜ சோழன், கண்ணகி, பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட பலருக்கு அவர் சிலைகள் வைத்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு மட்டுமே சிலைகள் வைக்கப்படுவது வழக்கமாக இருந்த சூழலில் உயிருடன் இருக்கும்போதே காமராஜருக்கும், கருணாநிதிக்கு மட்டுமே சிலைகள் அமைக்கப்பட்டன. காமராஜர் சிலையை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்துவைத்தார்.
பெரியாரின் குருகுல மாணவன் கருணாநிதி
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அதனையடுத்து அவருக்கு பெரியார் பாராட்டு விழா நடத்தினார். அப்போது, “என் குருகுல மாணவன் கருணாநிதிக்கு தலைநகரில் சிலை வைக்க வேண்டும்” எனக் கோரிக்கைவைத்தார்.
ஆனால் கருணாநிதி அதனை மறுத்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பெரியாருக்கு சிலை வைக்கப்படும், அதற்குப் பிறகே எனக்குச் சிலை வைத்துக்கொள்ளலாம் என்றார். அதனால் அப்போது கருணாநிதிக்கு சிலை வைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து அண்ணா சாலையில் பெரியாருக்கு சிலை அமைத்து மணியம்மை முன்னிலையில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்துவைத்தார். விழாவில் பேசிய மணியம்மை, 'பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டுவிட்டது இனி கருணாநிதிக்கும் சிலை அமைக்கலாம்' என்றார்.
கருணாநிதிக்கு சிலை
அதற்கான பணியை ஆரம்பித்தபோது சட்ட ரீதியான சிக்கலை கொடுக்க அதிமுக முனைந்தது. ஆனால், அதனை திராவிடர் கழகம் முறியடித்து 1975 செப்டம்பர் 21 அன்று கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டது. அதன் பிறகு காட்சிகள் மாற ஆரம்பித்தன.
1975ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதன்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பிறகு கருணாநிதிக்கு 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம்தான்.
இந்தச் சூழலில்தான் அதிமுக நிறுவனத் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் 1987ஆம் ஆண்டு காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது, 'கருணாநிதிதான் எம்ஜிஆரின் மரணத்துக்கு காரணம்' எனக் கருதி எம்ஜிஆர் தொண்டர் ஒருவர் கருணாநிதியின் சிலையைக் கடப்பாறையைக் கொண்டு சேதப்படுத்தினார்.
சின்னத்தம்பி நெஞ்சில்தான் குத்தினான்
அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்தது. புகைப்படத்தைக் கண்ட திமுகவினர் கொந்தளித்தனர். நிலைமை தீவிரமாவதை உணர்ந்த கருணாநிதி,
"உடன்பிறப்பே
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை
நெஞ்சிலேதான் குத்துகிறான்;
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!” என்று கவிதை எழுதி உடன்பிறப்புகளைச் சாந்தப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கருணாநிதிக்கு சிலை அமைக்க திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மீண்டும் முயன்றார். ஆனால், கருணாநிதி தனக்கு சிலை அமைக்க வேண்டாமென உறுதியாக மறுத்துவிட்டார்.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்குச் சிலை அமைக்கப்பட்டது. இருந்தாலும், அண்ணா சாலையில் கருணாநிதிக்குச் சிலை அமைப்பது கூடுதல் சிறப்பு என திமுகவினர் கருதினர். தற்போது அதற்குச் செயல் வடிவம் வர இருக்கிறது.