சென்னை: அமைச்சர் கா. ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் 12 புதிய அறிவிப்புகளை இன்று (செப்டம்பர் 3) வெளியிட்டார்.
- வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வுத் தேவைகளுக்கு என மூன்று உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.
- வனத் துறையின் தேவைகள், சிறந்த மேலாண்மைக்காகத் தமிழ்நாடு வனத் துறை நடவடிக்கைகள் மின்னணு மயமாக்கப்படும்.
- வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும். இதற்கென ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தென் மாவட்ட யானைகள் வாழ்விடங்களைப் பாதுகாக்கும்பொருட்டு அகத்தியர் மலை யானைகள் காப்பகம் ஏற்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும்பொருட்டு கடற்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும்.
- வனப் பாதுகாப்பு மற்றும் வன குற்றங்களை எளிதில் கண்டறிய மோப்பநாய் பிரிவுகள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்படுத்தப்படும்.
- கடல் வாழ் விலங்கு வேட்டை தடுத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் குற்றங்களுக்குச் சிறப்பு கடல்சார் உயர் இலக்கு படை ஒன்று உருவாக்கப்படும்.
- அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களில் செயல்திறனை மேம்படுத்த விரிவான வணிக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு தேயிலைத் தோட்ட ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள திருத்தப்பட்ட ஊதியம் இந்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- வன உயிரின குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க, வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.
- வனத்துறை வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வு குறிப்பேடுகள், வன மேலாண்மை தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு எளிதில் கொண்டுசெல்லவும், பொதுமக்கள் வனத் துறை தொடர்பான தகவல்களை எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும் வன ஆவணக் களஞ்சியம் மற்றும் வனத் தரவு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
- அந்நிய களை தாவரங்களை அகற்றி வனப்பகுதிகளை நல்ல வளமைக்கு கொண்டுவர தனிக் கொள்கை ஒன்று வகுக்கப்படும்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு