சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் பன்னாட்டு முனையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை நிறுத்தி, அவர்களின் கைப்பைகளைச் சோதனையிட்டனர். இருவருடைய கைப்பைகளிலும் அடிப்பாகத்தில் ரகசிய அறையிருந்ததைக் கண்டுபிடித்தனர். அதனைப் பிரித்துப் பார்த்தபோது, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சிகள் ஆகியவை மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
இரண்டு பயணிகளிடமிருந்து 14.57 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல்செய்தனர். இதையடுத்து இருவரின் பயணங்களையும் ரத்துசெய்தனர். அத்தோடு இருவரையும் கைதுசெய்தனர்.
அதேபோல் சென்னையிலிருந்து இலங்கை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமான பயணிகளையும் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடமைகளைச் சோதனையிட்டனர். அதில் அமெரிக்க டாலர் கட்டுகள் மறைத்துவைத்திருப்பதைப் கண்டுபிடித்தனர்.
3 பேர் கைது
அவரிடம் 7.85 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல்செய்தனர். அத்தோடு அவருடைய பயணத்தையும் ரத்துசெய்து, பயணியை கைதுசெய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலர்கள், துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கடத்த முயன்ற 22.42 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல் செய்ததோடு, மூன்று ஆண் பயணிகளைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: IPL 2022 AUCTION: 10 கோடியில் ஹசரங்கா... மயக்கம் போட்டு விழுந்த ஏலம் விடுபவர்!