சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே14) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் 2ஆயிரத்து 500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியின் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் (Panic Button) பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை, காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் பல வகையான பயன்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும். மேலும், அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!