கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகளை திறப்பது, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது. இதையடுத்து, இந்த 4ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையை தவிர தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் சலூன்கள், அழகு நிலையங்களை உள்ளிட்டவற்றை திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன்களை திறக்கலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி இல்லை.
சலூன்கள், அழகு நிலையங்களில் குளிர்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியை அவ்வப்போது தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: சந்திரசேகர ராவ்