சென்னை: கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், முன் ஜாமின் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால், தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்துள்ளனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.