சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரவை ஆலை முகவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், 'உணவு பாதுகாப்பில் ஏற்கெனவே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், சத்துணவு தேவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. இந்த ஆண்டு அமைச்சர் கூறிய இலக்கு 58 ஆயிரம் மெட்ரிக் டன், ஆனால் 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ அரிசி செறிவூட்டப்பட்ட அரிசியாக இருக்கும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.
தற்போது உணவுத் திருவிழா போல் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து நடத்த உள்ளோம். கடந்த ஆண்டு 18 லட்சம் நெல் அரவை செய்யப்படாமல் இருந்தது, இந்த ஆண்டு அரவை செய்யாத நெல் என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்ததோடு, பிப்ரவரி மாதம் அதிக வேலை இருக்கும். அப்போதும் உங்கள் உதவி வேண்டும். உலக அளவில் உக்ரைன் பிரச்னையால் கோதுமை உற்பத்தி குறைந்து உள்ளது' எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, 'அரவை ஆலை முகவர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று கூறினார். கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனைப் படைத்துள்ளனர். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: "செறிவூட்டப்பட்ட அரிசியை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி இரும்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது. 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும்’ என்று கூறினார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கேள்விக்குப் பதில் அளித்த அவர், ’தலைமைச் செயலக கூட்டத்தில் பொங்கலுக்கு என்ன பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.
அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பது குறித்து கேள்விக்கு, ’அரிசி கடத்தலைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வாகனம் செல்லாத 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், கடந்த காலத்தை விட மூன்று நான்கு மடங்கு அரிசி கடத்தலை தற்போது தடுத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.
’உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறைக்கு 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி 12, 13, 14 அகில இந்திய கபடி போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் தலை சிறந்த அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
புரோ கபடி போட்டியில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் பிரிவுக்கு முதல் பரிசு ரூ.20 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.15 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.7.5 லட்சம். பெண்கள் பிரிவுக்கு முதல் பரிசு ரூ.15 லட்சம்’ என்றும் தெரிவித்த அவர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றது குறித்து எந்த அமைச்சர்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை என்றும் கூறினார்.