சென்னை: உள்ளாட்சி அமைப்பால் அடையாளம் காணப்பட்ட, நியமிக்கப்பட்ட பகுதி தவிர, சாலைகள், நதிக்கரைகள், நீர்நிலைகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் போன்றவற்றில் C&D (கட்டுமானம் மற்றும் இடிப்பு) கழிவுகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அகற்றினால், மீறுபவர்களுக்கு எதிராகச் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 (திருத்தப்பட்டது) விதிகளின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல், நவீனமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை ஆகியவை கட்டுமானத் துறையை அபரிமிதமான விகிதத்தில் வளரச் செய்கிறது. பழைய சிவில் கட்டுமானங்களுக்குப் பதிலாக புதிய, பெரிய மற்றும் சிறந்த கட்டிடங்களை உருவாக்க, இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழைய கட்டுமானம் மற்றும் இடிப்பு கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை முறையற்ற வகையில் கையாளும்போது சுற்றுச்சூழலுக்குக் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, நில மாசுபாடு மற்றும் ஒலி மாசு போன்ற விளைவுகளுக்குக் காரணமாகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உருவாகும் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளைத் திறம்பட நிர்வகிக்க, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC), 29 மார்ச் 2016 அன்று கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள், 2016, அறிவித்துள்ளது. மேலும் அது தொடர்பான அனைத்து பங்குதாரர்களுக்கும் பொறுப்புகள் மற்றும் கடமைகளைப் பரிந்துரைத்துள்ளது.
புதிய கட்டுமானம், மறு வடிவமைப்பு, பழுது மற்றும் இடிப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் கட்டுமான பொருட்கள், குப்பைகள், இடிபாடுகள் போன்ற C&D (கட்டுமானம் மற்றும் இடிப்பு) கழிவுகளை உற்பத்தி செய்யும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது அதிகார அமைப்புக்கும் இவ்விதிகள் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள், 2016, கழிவு உற்பத்தியாளர்களின் கடமைகளாகச் சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளது. அதன்படி உருவாக்கப்படும் கழிவுகளைச் சேகரித்தல், பிரித்தல், சேமித்தல். ஒரு நாளில் 20 டன் அல்லது அதற்கு மேல் அல்லது ஒரு மாதத்திற்கு 300 டன் கழிவுகளை உருவாக்கும் எந்தவொரு திட்டத்திற்கும், கட்டுமானம் அல்லது இடிப்பு அல்லது மறுவடிவமைப்புப் பணிகளைத் தொடங்கும் முன், கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சமர்ப்பித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து தகுந்த அனுமதிகளைப் பெற வேண்டும்.
மேலும் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சேகரிப்பு மையத்தில் சேமித்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலாக்க வசதிகளிடம் ஒப்படைத்தல், கட்டுமான மற்றும் இடிப்புக் கழிவுகளைப் போக்குவரத்து, பொதுமக்கள், வடிகால்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளைச் சேமிப்பதற்காக, அதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகளை அமைக்க வேண்டும் எனவும் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை முறையாகக் கையாள்வதற்கும் அகற்றுவதற்கும் C&D விதிகளின்படி, அனைத்து மொத்த கழிவு உற்பத்தியாளர்கள், துறைகளுக்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் தலா நாளொன்றுக்கு 400 டன் (TPD) திறன் கொண்ட கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளைச் செயல்படுத்துவதற்கான வசதிகளை, பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு வெளி நிறுவனம் மூலம் (C40 நகரங்கள்) ஒரு வரைவு நகரக் காலநிலை செயல் திட்டத்தை (CCAP) தயாரித்துள்ளது.
இது நிலையான கழிவு மேலாண்மையை முன்னுரிமைத் துறைகளில் ஒன்றாகக் கண்டறிந்து, பல்வேறு பரவலாக்கப்பட்ட கழிவு செயலாக்க அலகுகளை அமைப்பதன் மூலம் 100 விழுக்காடு கழிவுகளைப் பிரிக்கும் நடவடிக்கையை அடையாளம் கண்டுள்ளது.
எனவே கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள், 2016 மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, C&D கழிவுகளை முறையான சேகரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து, மறுசுழற்சி மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை உறுதிசெய்ய அனைத்து பங்குதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவலர் வீர வணக்க நாள் - 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி