சென்னை: எழிலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 30) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் எஸ். கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குநர் சி. அ. ராமன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அம்சங்கள்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்களுக்கு வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி செப்டம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஒத்திகை பயிற்சியின் மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் பணியில் இணைந்து செயல்படும் துறைகள் மற்றும் பிற தொடர்பு நிறுவனங்களின் விழிப்புணர்வு நிலைகளை மதிப்பீடு செய்து வெள்ள அபாய முன் எச்சரிக்கை அமைப்பின் செயல்பாடுகள் சரிவர இயங்குகின்றதா என்பதை அறிய முடியும்.
வெள்ள அபாயக் காலத்திலும், பேரிடர் காலத்திலும் அபாய முன் எச்சரிக்கை அமைப்பினை (Early Warning System) திறம்படப் பயன்படுத்துதல், மாநிலம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தினை (Disaster Management Plan) மதிப்பாய்வு செய்து அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும், பொறுப்புகளையும், சரியாகவும் முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துதல், மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் சம்பவங்களை எதிர்கொள்வதற்கான பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகள், செயல்பாட்டில் உள்ளதா (Incident Response System) என்பதை அறியவும் இது உதவுகிறது.
மாவட்ட மற்றும் மாநில அளவில் பேரிடர் மற்றும் பல்வேறு அவசர உதவிகளுக்கு தேவையான, மனிதவளம், உபகரணங்கள், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை கண்டறிதல், மக்களையும் மற்றும் சமூகத்தினரையும் தேவையான நேரங்களில் தொடர்பு கொள்ளவும், பேரிடர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொலை தொடர்பு சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்தல், உள்ளூர் ஆளுமை குழுக்கள் (Local Governing Body), தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மூலம் விழிப்புணர்வை உருவாக்குதல். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும், தொடர்பு மற்றும் சார்பு நிறுவனங்களின் அலுவலர்களும் (Line Departments & Officials) விழிப்புணர்வு நிலையை அறிதல், அபாய முன் எச்சரிக்கை அமைப்பினை (Early Warning System) சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Incident Response System) மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் செயல்பட்டு வருகிறது என்பதை பற்றி அறியவும் உதவும்.
மேலும், பேரிடர் பணியில் ஈடுபட்டு வரும் அரசு நிறுவனங்கள் துறைகளில் உள்ள இடைவெளி மற்றும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மனித வளங்கள் மற்றும் தேவையான தொலை தொடர்பு வசதிகள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறியவும், மக்களை பேரிடர் பணியில் ஈடுபடுத்துவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வலர்களையும் பேரிடர் பணியில் இணைப்பதும் அவசியமானதாகும்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி 01.09.2022 அன்று காலை 9:00 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஒத்திகையின் போது, தேவையான வெள்ள அபாயம் குறித்த தகவல், தொலைபேசி, மின்னஞ்சல், அபாய ஒளி, குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்தந்த இடங்களில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டதோ, அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை மாவட்ட பேரிடர் ஆணையமும் மற்ற பேரிடர் பணியில் தொடர்புள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சேதம், பொருள், கட்டிட, கால் நடைகள், பயிர் சேதங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து பாதிப்புக்கு ஏற்றார் போல் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரையும் பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வது, அனைத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட வேண்டும்.
மேலும், அந்த பகுதிகளில் நடைபெறும் ஒவ்வொரு துறை சார்ந்த செயல்பாடுகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட துணை ஆட்சியர் அளவில் பணிபுரியும் அதிகாரிகளையும், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையிலிருந்து அதிகாரிகளையும் நியமனம் செய்து பகுதிகளில் நடக்கும் செயல்பாடுகளை படம் பிடித்து அவர்களுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குரூப்பில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 வெள்ள அபாய இடங்களில் இருந்து செயல்பாடுகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் பெறப்படும்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் செயல்பாடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தங்களின் அனுபவம் பகிர்வுகளை மேற்கொள்வர். இந்த நிகழ்வின் போது மக்களின் விழிப்புணர்வு நிலை, பேரிடர் மேலாண்மையில் பணிபுரியும் அதிகாரிகளின் அனுபவம், முறையாக சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்ட அபாய முன் எச்சரிக்கை (Early Warning System), மாவட்டம் சார்ந்த பேரிடர் மேலாண்மை திட்டம், மீட்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அனுபவம், மற்ற நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக தகவல் கல்வி தொடர்பு சாதனங்கள் ஆகியவை குறித்தம் அறிக்கை பெறப்படும்.
இது போன்ற ஒத்திகை பயிற்சியின் மூலம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், தொடர்பு நிறுவனங்கள், மக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பேரிடர் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் ஒவ்வொரு நபருடைய பங்களிப்பும் எவ்வாறு முக்கியமானது என்பதை பற்றியும், எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய உபகரணங்கள், எந்த நேரத்திலும் பேரிடர் எற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
எந்த வகை பேரிடர்களையும் எதிர்கொள்ளவும் சமாளிக்க மக்கள், அதிகாரிகள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். பேரிடர் மேலாண்மையை அர்த்தபடுத்தவும், அனைவரின் மனதில் ஆழ பதிய செய்வதும், இந்த ஒத்திகை பயிற்சியின் முக்கியத்துவமாகும். மேலும், பேரிடர் சார்ந்த மீட்புப் பணியில் எந்தெந்த நிலையில் பின்தங்கி இருக்கிறார்கள், எந்தெந்த நிலையில் கற்று கொள்ள வேண்டும், மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் எந்தெந்த நுட்பங்களை கையாள வேண்டும், பேரிடர் காலங்களில் இதை தெரிந்து கொண்டு பெரிய அபாயங்களையும், சேதங்களையும், தவிர்ப்பது மற்றும் குறைப்பதே இந்த ஒத்திகை பயிற்சியின் முக்கிய அம்சம் ஆகும்.