சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (செப். 16) மாலை முதலே மழை கொட்டி வருகிறது. நள்ளிரவு வரை விட்டு விட்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக 5 சர்வதேச விமானங்கள் உள்பட 38 விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று (செப். 16) சனிக்கிழமை மாலையில் இருந்து, விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் மழை அதிகரிக்க தொடங்கியது. அதோடு இடி, மின்னலுடன் சூறைக்காற்றும் பலமாக வீசியது. அதன் பின்பு இரவு 8 மணிக்கு மேல் மழையும் சூறைக்காற்றும் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் மாலையில் இருந்து நள்ளிரவு வரையில், விமான சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.
சென்னையில் தரையிறங்க வந்த தூத்துக்குடி, திருச்சி, கோவை, மதுரை, விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மற்றும் சர்வதேச விமானமான டாக்கா ஆகிய 18 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. அதன் பின்பு அவ்வப்போது மழையும், சூறைக்காற்றும் சிறிது ஓயும் போது, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
அதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, மதுரை மற்றும் பக்ரைன், குவைத், கோலாலம்பூர், பாரீஸ் செல்லும் சர்வதேச விமானங்கள் உள்பட 20 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து, 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் 18 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 38 விமானங்கள் தாமதமாகியது. இந்த விமானங்கள் தாமதம் பற்றி, சென்னை விமான நிலையத்தில் முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யவில்லை. இதனால் விமானப் பயணிகளும், பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
அவர்களின் வாகனங்கள் நீண்ட நேரமாக, சென்னை விமான நிலையத்தில் உள்ள மல்டி லெவல், அடுக்குமாடி கார் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததால், கூடுதலாக பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இடத்தில், பயணிகளுக்கும், பார்க்கிங் கட்டண ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிட்டிங்களா?... அமைச்சர் கொடுத்த அப்டேட்!