கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 11) கோவையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் அதிமுகவினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர்.
அப்போது, சாலையில் உள்ள கொடிக்கம்பம், அருகே நின்றுகொண்டிருந்த அனுராதா என்ற ராஜேஸ்வரி மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அனுராதா, சாலையின் நடுவே விழுந்துவிட்டார். இதனையடுத்து சாலையில் விழுந்த அவர்மீது, பின்னால் வந்த லாரி ஏறியதில் இரண்டு கால்களும் நசுங்கி படுகாயமடைந்தார். பின்னர் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், தனிநபர்கள் டிஜிட்டல் பேனர்கள் வைக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பள்ளிக்கரணை சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்தார். சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கோவையில் அனுராதா ராஜேஸ்வரி மீது கொடிக்கம்பம் விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு ஒப்புதல் தெரிவித்தது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு