சென்னை: பண்டிகை காலங்களில் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலமுறை புகார் எழுந்தது. வெளியூருக்கு பயணம் செல்பவர்கள் தங்கள் விருப்பத்தின்படியே கட்டணத்தை செலுத்தி செல்வதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கட்டண உயர்வு புகார்களைத் தொடர்ந்து குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. Www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 690 முதல் ரூ. 1,940 எனவும், திருநெல்வேலிக்கு ரூ. 870 முதல் ரூ. 2,530 எனவும், திருச்சிக்கு ரூ.520 முதல் ரூ.1,470 எனவும், கோவைக்கு ரூ. 720 முதல் ரூ. 2,090 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பண்டிகை மற்றும் சாதாரண நாட்களில் கூட அதிக கட்டணங்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதை தவிர்த்து அரசுபபேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் சாதாரண நாட்களில் இருக்கைகள் காலியாக உள்ளதாக தனியார் பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மேயர் பத்தி பேசியதை ஏற்கனவே டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு