சென்னை வில்லிவாக்கம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (77). இவர் நேற்று மாலை வில்லிவாக்கம் கல்பனா பேருந்து நிலையத்தில் இருந்து வ.உ.சி. நகர் வரை செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியே நான்கு பெண்கள் சவாரியுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர், எங்கே போக வேண்டும் என அன்னலட்சுமியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு வ.உசி. நகர் என்று மூதாட்டி சொல்ல, வெறும் 10 ரூபாய் கொடுத்தால் போதும் என ஆட்டோ ஓட்டுநர் ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் மூதாட்டியை ஏற்றியுள்ளார். பின்னர் ஆட்டோவிலிருந்த நான்கு பெண்களும் அன்னலட்சுமியிடம் பேச்சு கொடுத்து வந்துள்ளனர்.
பின்னர் கழுத்தில் இருந்த செயின் அறுந்து கிடப்பதாகவும், அதனைக் கழற்றி பையில் வைத்துக் கொள்ளுமாறும் மூதாட்டியிடம் அந்த பெண்கள் கூறியுள்ளனர். இதனால் மூதாட்டி செயினை கழற்றி தனது பையில் வைத்துள்ளார்.
அதனைத்தொடந்து வ.உ.சி. நகர் வந்ததால் ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து செல்லும்போது தனது பையை அந்த மூதாட்டி பார்த்துள்ளார். அப்போது பையிலிருந்த ஐந்து சவரன் செயின் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுள்ளார்.
இதனையடுத்து அந்த மூதாட்டி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் புழல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மாதவ பெருமாள் (48) என்பவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு - இதுவரை 50 பேர் கைது