சென்னை: கரோனா காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்டத்தில் 1980-81ஆம் ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் உட்பட அனைவரும் தொலைதூரக் கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத பல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்தது. இதன்படி 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், நடந்த தேர்வுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட போது 116 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, தேர்வுக்குப் பதிவு செய்யாமலேயே மாணவர்கள் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த பல்கலைக்கழகம், பேராசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவினர் நடத்திய விசாரணை அறிக்கையை, பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது பணியில் உள்ள இரண்டு பேர் உட்பட ஐந்து பேர் இந்த முறைகேட்டுக்கு துணை போனது தெரியவந்தது.
உதவி பதிவாளர் நிலையிலான தமிழ்வாணன், உதவிப்பிரிவு அலுவலர் எழிலரசி, உதவியாளர் ஜான் மற்றும் அண்மையில் ஓய்வுபெற்ற உதவி பதிவாளர் மோகன் குமார், முன்னாள் பிரிவு அலுவலர் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மரபணுவின் மூலம் மார்பகப் புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம் - மருத்துவர்களின் பிரத்யேகப்பேட்டி