சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில், சிறுமியை அதே பகுதியைச் சார்ந்த 5 வாலிபர்கள் பாலியல் தொல்லை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி நேற்று (மார்ச் 25) அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "எனது தந்தை லாரி ஓட்டுநர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டுக்குக் குடித்து விட்டு வருவார். மேலும், அவர் அம்மாவிடம் தகராறு செய்து வந்தார். இதனையடுத்து, அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறு ஒருவரிடம் சென்று விட்டார். இதன் பிறகு, நான் எனது 15வயது அண்ணனுடன் வசித்து வருகிறேன்.
அவன் மெக்கானிக் கடைக்குச் சென்று வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்து வருகிறார். எனது அண்ணனுக்கு நண்பர் ஒருவர் உள்ளார்.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி, அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் குடும்பத்தோடு வீட்டை காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்திற்குச் சென்று விட்டார்.
இதன்பிறகு, இந்த வாலிபர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து அண்ணனிடமும் நண்பர் எந்த ஊரில் உள்ளார் எனக் கேட்டு தகராறு செய்து வந்தனர். மேலும், அக்கும்பல் என்னையும், அண்ணனையும் கொலை செய்து விடுவோம் எனப் போதையில் வந்து மிரட்டினர். இதோடு மட்டுமல்லாமல், அக்கும்பல் என் அண்ணனைச் சரமாரியாகத் தாக்கினர்.
இதனால் பயந்து போன என் அண்ணன் கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்குச் சென்று விட்டார். அதன் பிறகு நான் தனிமையில் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், எனது தந்தை குடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு வராததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி அந்தக் கும்பல் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி தவறாக நடக்க முயன்றார். நான் வெளியே ஓடி வந்தால், என்னை விடாமல் தடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதேபோல், அவர்கள் அடிக்கடி இரவில் வீட்டுக்கு வந்து தொடர்ந்து என்னை பாலியல் தொல்லை செய்து வந்தனர்.
எனவே, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனச் சிறுமி புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் விசாரணை நடத்தியது. இதில், சிறுமியை அக்கும்பல் பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையில் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 5பேர்கள் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித் திரிந்த கௌதம், லக்ஷ்மணன் அப்துல், அக்பர், பாபு ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.