கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டதை அடுத்து, வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பலர் நாடு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த மே மாதம் ஏழாம் தேதி முதல் வெளி நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் அழைத்து வருகிறது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மார், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 15 நாடுகளில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 259 பேர் திரும்பியுள்ளனர்.
விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, இவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில், கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்ட பின்னரே, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது வரை வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களில் 257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் மலேசியாவில் இருந்து வந்த மூன்று பேருக்கும், சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த இருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 262ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், பல்வேறு நகரங்களில் இருந்து 686 விமானங்களின் வாயிலாக 44 ஆயிரத்து 23 பேர் சென்னை மீனம்பாக்கம் உள் நாட்டு முனையத்திற்கு இதுவரை வந்துள்ளனர். உள்நாட்டு முனையத்திற்கு வந்தவர்களில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு முனையத்திற்கு வந்தவர்களில் மொத்தம் 51 பேர் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில், 3 மாதத்தில் ஆறு லட்சம் பேர் கைது!